ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: சினிமா உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியாகக் காரணமாக இருந்ததாக சினிமா உதவி எடிட்டர் உள்ளிட்ட மேலும் 3 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை சிக்கல்களால் தள்ளிப்போனது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்கைக் குழு படத்தை ஆய்வு செய்தது. விரைவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முழுப்பதிப்பும் இணையதளங்களில் சட்ட விரோதமாகக் கசிந்தது. இது படக்குழுவினர் மட்டுமின்றி, சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாநில சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதல்கட்டமாக படம் வெளியான அனைத்து இணையதள முகவரிகளையும் கண்டறிந்து, அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் முடக்கினர். மேலும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் திரைப்படம் கசிய மூளையாகச் செயல்பட்டது யார் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்துக்கான எடிட்டிங் ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
இவர்தான் திரைப்படத்தின் ரீல்களை திருடிச்சென்று அதை இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். இவருக்கு உதவியாக இருந்த மேலும் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பணத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.