ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28 வரை அவகாசம்
சென்னை: சட்டவிரோதமாக ஆற்று மணலை பதுக்கி வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஏப்.28 வரைஅவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆற்று மணலை சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருந்ததாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் டவுண் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மார்ச் 31 வரை அவகாசம் வழங்கியிருந்தது.
இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி விஜயபாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதால் மார்ச் 30 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ததாலும், மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதாலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை.
எனவே இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான அவகாசத்தை ஏப்.28-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஏப்.29, ஏப்,30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காலை 10.30-க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்