Select Location
All Locations
State
Region
City / District
கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் அதிரடியால் ஆர்சிபி அணியை வீழ்த்தியது டெல்லி

கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் அதிரடியால் ஆர்சிபி அணியை வீழ்த்தியது டெல்லி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நேற்று பிற்​பகலில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி​யின் கேப்​டன் அக்​சர் படேல் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இரு அணி​யிலும் மாற்​றங்​கள் செய்​யப்​பட​வில்​லை. முதலில் பேட் செய்த ஆர்​சிபி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான பில் சால்ட் 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான விராட் கோலி 13 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் லுங்கி நிகிடி பந்தை டீப் கவர் திசை​யில் தூக்கி அடித்த போது பதும் நிஷங்​கா​விடம் கேட்ச் ஆனது.

இதைத் தொடர்ந்து தேவ்​தத் படிக்​கல் 18, கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 8, டிம் டேவிட் 26, ரோமாரியோ ஷெப்​பர்டு 1 ரன்​னில் நடையை கட்​டினர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் ஜிதேஷ் சர்மா 20 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன், 14 ரன்​களும், கிருணல் பாண்​டியா 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 12 ரன்​களும் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி​யால் கடைசி 5 ஓவர்​களில் வெறும் 29 ரன்​கள் மட்​டுமே சேர்க்க முடிந்​தது. இந்த காலக்​கட்​டத்​தில் அந்த அணி 4 விக்​கெட்​களை பறி​கொடுத்​திருந்​தது. டெல்லி அணி தரப்​பில் குல்​தீப் யாதவ், அக்​சர் படேல், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகேஷ் குமார் ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். 176 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்​டத்​தில் 15 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 130 ரன்​கள் எடுத்​திருந்​தது. தொடக்க வீர​ரான கே.எல்​.​ராகுல் 34 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் விளாசிய நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

பதும் நிஷங்கா 1, கருண் நாயர் 5, சமீர் ரிஸ்வி 2 ரன்​களில் நடையை கட்​டினர். அக்​சர் படேல், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் அந்த அணி​யின் வெற்​றிக்கு கடைசி 5 ஓவர்​களில் 46 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. புவனேஷ்வர் குமார் வீசிய 16-வது ஓவரில் 5 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். இந்த ஓவரின் 5-வது பந்​தில் அக்​சர் படேல் தசைபிடிப்பு காரண​மாக ரிட்​டர்​யடு ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​னார். அக்​சர் படேல் 19 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து டேவிட் மில்​லர் களமிறங்​கி​னார். ஜோஷ் ஹேசில்​விட் வீசிய அடுத்த ஓவரில் 4 ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டன. இதனால் டெல்லி அணிக்கு கூடு​தல் நெருக்​கடி ஏற்​பட்​டன.

புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 12 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ரஷிக் சலாம் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணி​யின் வெற்​றிக்கு 15 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் பந்​தில் டேவிட் மில்​லர் ஒரு ரன்​னும் அடுத்த பந்​தில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்​னும் சேர்த்​தனர். தொடர்ந்து அடுத்த 2 பந்​துகளை​யும் சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட டேவிட் மில்​லர் 5-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.5 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 179 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 47 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், டேவிட் மில்​லர் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 22 ரன்​களும் விளாசினர். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற டெல்லி அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​துக்கு முன்​னேறியது. ஆர்​சிபி அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்​று பட்​டியலில்​ 2-வது இடத்​தில்​ தொடர்​கிறது.


Hindu Tamil 14 days ago
Home Flash News