இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு: ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி உறுதி
புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்திய எண்ணெய்க் கப்பல்கள் பயணத்தைத் தொடர்ந்தன
ஆனால், ஈரானிய புரட்சிகர காவல் படை ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, அந்தக் கப்பலும் ‘பாக்ய லக்ஷ்மி' என்ற கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து பின்வாங்கியது. இதுகுறித்த வீடியோவை ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கப்பலின் மாலுமி ஈரானிய கடற்படையுடன் தொடர்பு கொண்டு ‘‘ஈரானிய கடற்படை, இது பாக்ய லக்ஷ்மி. உங்கள் குரல் தெளிவாகக் கேட்கிறது’’ என்று கூறுகிறார். அதற்கு ஈரானிய கடற்படையினர், ‘‘உடனடியாகத் திரும்பிச் செல்லுங்கள்’’ என்று உத்தரவிடுகின்றனர்.
இதையடுத்து, பாக்ய லக்ஷ்மி கப்பல் பின்வாங்கிச் சென்றது. இதேபோல், சன்மார் ஹெரால்ட் என்ற மற்றொரு கச்சா எண்ணெய் டாங்கரிடமிருந்தும் அபாய அழைப்புவந்தது. இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் கவலையை ஈரான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு இந்திய தூதரிடம் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார். மேலும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான வழிமுறைகளை விரைவில் மீண்டும் தொடங்குமாறும் வலியுறுத்தினார். இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி கூறும்போது, “ஈரானுக்கும் இந்தியாவுக்குமான உறவு வலுவானது. நீங்கள் குறிப்பிடும் இந்தச் சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்’’ என்றார்.