“தேசிய விருது கிடைக்க வேண்டும்” - ராதிகாவை பாராட்டிய பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அவரை தற்போது அவரது சிஷ்யை நடிகை ராதிகா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவர் பாரதிராஜாவிடம், “நல்லாருக்கீங்களா, தாய் கிழவி படம் பார்த்தீங்களாமே, நல்லாருந்திச்சா” எனக் கேட்க, “நேஷ்னல் அவார்ட் உனக்கு வரணும்” என பாரதிராஜா பதில் சொன்னார். பின்பு தேசிய விருது கிடைத்தால் உங்க காலடியில் வைத்துவிடுகிறேன் என ராதிகா பதிலளித்தார்.
இதனை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், “இந்த ஆசி, எந்தவொரு விருதுக்கும் மேலானது. என் குரு, என் இயக்குநர் பாரதிராஜாவை இந்த நிலையில் பார்க்க நான் விரும்பவில்லை. இதற்கு முன்பும் விரும்பியதில்லை. இருந்தாலும் இந்தத் தருணத்தை நான் பொக்கிஷமாகப் போற்றுகிறேன். தாய் கிழவி படத்தையும் இயக்குநர் சிவகுமார் முருகேசனையும் அவர் உயர்வாக பேசினார். தற்போது அவருக்குள் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம், சினிமாவின் மீதான அவரது அன்பு மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாய் கிழவி படம் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசிய இப்படத்தில் ராதிகாவின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக இப்பட விழாவில் ராதிகா பேசும்போது, இப்படத்தை பாரதிராஜாவுடன் நிறைய பேர் ஒப்பிட்டு சொன்னதாகவும் ஆனால் அவர் தனி ரகம் என்றும் அவர் சினிமாவில் ஒரு புரட்சி ஏற்படுத்தியவர் என்றும் கூறினார். மேலும் அந்த புரட்சியை சிவகுமார் முருகேசன் கண்டிப்பாக கடைபிடிப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.