மறக்க முடியுமா! - 2 இன்னிங்ஸ்களிலும் சதம் நாட் அவுட்: அரவிந்த டி சில்வா உலக சாதனை!
இதே நாளில் 1997-ல் இலங்கையின் அதிரடி பேட்டர் அரவிந்த டி சில்வா கொழும்பு சின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமெடுத்து இரண்டு முறையும் ஆட்டமிழக்காமல் உலக சாதனை படைத்தார்.
அந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 138 நாட் அவுட், இரண்டாவது இன்னிங்சில் 103 நாட் அவுட். மேலும் தன் தாய்நாட்டில் அவர் டெஸ்ட்களில் தொடர்ச்சியாக எடுத்த 6 சதங்களில் இந்த 2 சதங்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் சதங்களாகும். இவை எல்லாமே கொழும்புவின் பல்வேறு மைதானங்களில் அடிக்கப்பட்டவையே.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்தது. ஜெயசூரியா 72, அரவிந்த டி சில்வா 138. சக்லைன் முஷ்டாக் 4 விக்கெட்டுகள். பாகிஸ்தான் தொடர்ந்து ஆடி 292 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் மொயின் கான் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் சமிந்தா வாஸ் 4 விக்கெட்டுகளையும் சஞ்சீவ டிசில்வா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
2-வது இன்னிங்ஸில் இப்போது என்னவோ பாஸ்பால் கீஸ்பால் என்கின்றனரே அப்போதே அதை ஆடியது இலங்கை குறிப்பாக அரவிந்த டி சில்வா. ஜெயசூரியா 113 ரன்களை எடுக்க அரவிந்த டி சில்வா 99 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 103 ரன்களை விளாச இலங்கை அணி 95 ஓவர்களில் 386/4 என்று டிக்ளேர் செய்தது.
பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 426 ரன்கள், ஆனால் 4வது இன்னிங்ஸில் இலங்கைப் பந்து வீச்சு ஒன்றுமில்லாமல் போனது, காரணம் முரளிதரன் இல்லை. சலீம் மாலிக் 155 ரன்களை எடுக்க இன்சமாம் 54 நாட் அவுட் என்று நிற்க 285/5 என்று பாகிஸ்தான் முடிய, ஆட்டம் டிரா ஆனது தொடரு டிரா ஆனது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் வென்றார் அரவிந்த டி சில்வா. ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டு வீழ்த்த முடியாமல் நாட் அவுட்டாக இருந்த வகையில் டிசில்வாவின் உலக சாதனை தினமாகும் இது