“எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை” - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே
சென்னை: தங்கள் அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி உள்ளது. வான்கடேவில் கடந்த 23-ம் தேதி 103 ரன்களிலும், நேற்று (மே 2) 8 விக்கெட் வித்தியாசத்திலும் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு இந்த சீசனில் 7-வது தோல்வியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சனிக்கிழமை சிஎஸ்கே ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறியதாவது: “இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் ஆட்டம் எங்கள் வசம் இருந்தது. இந்த ஆடுகளத்தில் ரன் சேர்ப்பது கடினமானதாக இருந்தது. எங்கள் அணி 180 முதல் 190 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருந்தது. முக்கிய கட்டத்தில் எங்கள் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தது பின்னடைவாக அமைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் விரைந்து 2 முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் தர திட்டமிட்டோம். ஆனால், அவர்களோ ரிஸ்க் எடுக்காமல் சிறப்பாக பேட் செய்தனர்.
ஆடுகள சூழலை பொறுத்துதான் வீரர்களை தேர்வு செய்கிறோம். எங்கள் அணியினரால் 200+ ரன்கள் எடுக்க முடியும். ஆனால், அது இந்த ஆடுகளத்தில் முடியாது. இந்த மாதிரியான ஆடுகளத்தில் எங்களது சிறந்த ஆட்டத்தை விளையாட வேண்டும். ஆனால், அது எங்களால் முடியவில்லை. கடந்த ஆட்டத்தில் 240 ரன்கள் எடுத்தோம். ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்களால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தது, இருப்பினும் ரன் சேர்க்க தவறினோம். இப்போது நாங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை” என அவர் தெரிவித்தார்.
அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா மும்பை இந்தியன்ஸ் அணி? - ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி, 2 வெற்றி மற்றும் 7 தோல்விகளை பெற்றுள்ளது. அணியின் நெட் ரன் ரேட் -0.803 என உள்ளது. 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
இருப்பினும் அந்த அணி இந்த சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது 14 புள்ளிகளை அணி பெறும். அதே நேரத்தில் மற்ற அணிகள் விளையாடும் ஆட்டத்தின் முடிவும் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கலாம்.