சென்னை,
தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங்கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க.வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை..
தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவதாக சொல்லப்படும் ஐ.யு.எம்.எல்.-க்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.யு,எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று, முதல்-அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்-அமைச்சருக்கான துறையில் கூடுதலாக வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன் சுமை ஒழிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE