கொடுங்கையூரில் 37 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றம்
சென்னை: மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 37 லட்சம் டன் பழைய கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தினார். இதில் உள்ள 66,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ரூ.640.83 கோடியில் பயோமைனிங் முறையில் பணி 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு நிலத்தை மீட்டெடுப்பதற்காக 3 ஒப்பந்ததாரர்கள் வாயிலாக அகழ்ந்தெடுத்து, பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இந்த வளாகத்தில் திடக்கழிவுகள் அகற்றும் பணியை துரிதப்படுத்தி உரிய காலத்துக்குள் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். இந்த பணிகளை தாமதமின்றி ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் இதன் மீது தனிக் கவனம் மேற்கொண்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுவரை 37,57,529 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஏக்கர் நிலத்தில் 881 பசுமை நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார். அம்மா உணவகத்தில் ஆய்வு மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், அண்ணா நகர், டெய்லர்ஸ் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு சாப்பாடு நேரத்தில் நேற்றுமுன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள், பொதுமக்கள் வருகையை பார்வையிட்டார். பின்னர், இரவு உணவு சாப்பிட்ட மக்களிடம் கலந்துரையாடி உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ரூ.3-க்கு ஒரு செட் சப்பாத்தி வழங்கப்படுவதையும், அதற்கு பருப்பு கடைசல் வைத்திருப்பதையும் பார்வையிட்டும், சாப்பிட்டுப் பார்த்தும் தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும், சமையலறையில் இருப்பில் உள்ள பொருட்கள் விவரங்களையும், பாத்திரங்கள், கை கழுவும் இடங்களை பார்வையிட்டு, எரிவாயு சிலிண்டர் இருப்பில் உள்ளதையும், குடிப்பதற்கு தூய நீர் வழங்கப்படுவதையும் பார்வையிட்டார். முதல்வர் விஜய் உத்தரவுப்படி, ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் ஆணையர் அறிவுறுத்தினார்.