வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதி சுற்று வரை முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் அவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார்.
ஆனால், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி, ஓய்விலிருந்து திரும்புபவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி வரும் ஜூன் 26-ம்தேதி வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் தடைவித்தது. இது ஒருபுறம் இருக்க பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, வினேஷ் போகத் மகப்பேறு விடுப்பில் இருந்தார். அவர் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்ப முயன்ற நிலையில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வுத் தகுதி விதிகளில் இந்திய மல்யுத்த சம்மேளனம் திடீர் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
புதிய விதிகளின்படி, 2025 மற்றும் 2026-ல் நடந்த குறிப்பிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே தேர்வுத் சோதனைகளில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இதனால், விடுப்பில் இருந்த வினேஷ் போகத் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுத் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க முடியாதபடி “தகுதியற்றவர்” என இந்திய மல்யுத்த சங்கம் அறிவித்தது. இதனால் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான வீரர்கள் தேர்வில் வினேஷ் போகத் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை கடந்த 18-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தனிப்பட்ட மோதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சர்வதேச வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்றும், சம்மேளனம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது போல் நடக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்வுத் தகுதிக் கொள்கையானது ‘முற்றிலும் பிற்போக்குத்தனமானது’ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்தக் கொள்கையை மாற்றியபோது மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, அதன் ஒப்புதல் பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியது. 2025-ம் ஆண்டு ஜூலையில் வினேஷ் போகத் தாயானார். இப்போது நாம் மே மாதத்தில் இருக்கிறோம். அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு மல்யுத்த வீராங்கனை. அப்படியிருக்க, நீங்கள் அவருக்காகவே இந்தத் தேர்வு விதிகளையே மாற்றினீர்கள் என்று நாங்கள் ஏன் கருதக் கூடாது? உங்களுக்குள் என்னவிதமான மோதல்களோ அல்லது கருத்து வேறுபாடுகளோ இருந்தாலும், அதற்காக விளையாட்டுத் துறை ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இந்த நாட்டில் தாய்மை என்பது போற்றிக் கொண்டாடப்படுகிறது, அது ஒரு நபருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாமா?” என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சுற்றறிக்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றமே எல்லாவற்றையும் அப்பட்டமாக உணர்த்துகிறது. இது போன்ற முறையில் மல்யுத்த சம்மேளனம் செயல்படக்கூடாது. இது விளையாட்டுத் துறையின் நலனுக்கு உகந்தது அல்ல. முந்தைய சுற்றறிக்கையிலிருந்து நீங்கள் இந்த அளவுக்கு மாறியிருப்பது, இதற்குப் பின்னால் உள்ள பல விஷயங்களை மிகத் தெளிவாகப் பேசுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் வினேஷ் போகத்தின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் வாய்மொழியாக உத்தரவிட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வினேஷ் போகத் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு வழிவகுக்கும் வகையில், தகுதி விதிகளில் தளர்வுகளைக் கொண்டு வர இந்திய விளையாட்டு ஆணையத்தின் விதிகள் அனுமதிக்கின்றன. தேர்வுப் போட்டிகள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தொழில்நுட்பக் குழுவின் மேற்பார்வையில் நடத்தப்படும் என்றும் இது மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும், இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.