Select Location
All Locations
State
Region
City / District
ஆசிய போட்டிக்கான தேர்வில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆசிய போட்டிக்கான தேர்வில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் மல்யுத்த வீரர் / வீராங்கனைகளுக்கான தேர்வு முகாம்கள் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் கலந்த கொள்ள வினேஷ் போகத் தயாராகி வந்த நிலையில், இரண்டு முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் அவருக்கு தடை ​வித்​தது.

இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை கடந்த 18-ம் தேதி விசா​ரித்த தனி நீதிபதி மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

தனி நீதிப​தி​யின் தீர்ப்பை எதிர்த்து வினேஷ் போகத் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனுவை கடந்த 22-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யாயா மற்​றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்​கிய அமர்வு, வினேஷ் போகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில், ‘உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதால் வினேஷ் போகத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எங்களால் எதையும் செய்ய இயலாது; நீங்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறுவது முறையாக இருக்காது. இதை உங்களிடம் கூறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வேறு யாராக இருந்திருந்தாலும் இந்த வழக்கு வேறு ஒரு நிலையில் அணுகப்பட்டிருக்கும். ஆனால், இவர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்த முறை மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆனாலும், விளையாட்டு நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் அடிக்கடி தலையிடுவது, போட்டி அட்டவணைகளைச் சீர்குலைக்கும். மேலும், ஒட்டுமொத்த விளையாட்டுச் சூழலையும் பாதிக்கும்’ என தெரிவித்துள்ளனர்.

மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், தனது பங்கேற்பை எதிர்த்து மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு வினேஷ் போகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


Hindu Tamil 2 hours ago
Home Flash News