Select Location
All Locations
State
Region
City / District
கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை; ஆளுநர் அதிருப்தி

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை; ஆளுநர் அதிருப்தி

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ். வி.டி. சுதிஷன் அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், நேற்று 16 வது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தொடரில் ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்படாமல், இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையிலிருந்து மக்கள் மாளிகைக்கு வந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ஆளுநர் அவையில் இருக்கும்போதெல்லாம் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும். ஆனால், பாடல் பாடப்படாமல், இசைக்கருவி மூலமாக இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகரிடம் பேசியுள்ளேன். இதற்கு, உரியத் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன், “ வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டோம். அந்தப் பாடலின் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும். அதோடு, அந்தப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. பதவியேற்பு விழாவின்போது அப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அது நடந்திருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.


Nakkeeran 47 minutes ago
Home Flash News