சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அந்த குழு தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அனைத்துமட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசி வருகிறது. அவர்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெற்று வருகிறது. மேலும் திமுகவினர் தங்கள் கருத்துகளை நேரடியாக பதிவு செய்வதற்காக \”உடன் பிறப்பின் குரல்\” என்ற பெயரில் இணையதளத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதிலும் அனைவரும் கருத்துகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இணையதளம் வாயிலாக இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து “கள ஆய்வு” குழு திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறது.
இந்த ஆய்வுக்குழுவினர் வருகிற 10ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கள ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளனர். கள ஆய்வு குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் திமுகவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்பி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தேர்தல் முடிவுகள் குறித்து களஆய்வு குழு நடத்தி வரும் ஆய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கள ஆய்வு குழு தரும் அறிக்கையை அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.