அயோத்தி ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதல்வர் ஆதித்ய நாத் உத்தரவு
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் வலியுறுத்தினார். அயோத்தியில் உள்ள துறவிகள், இதர அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்தனர். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் டாக்டர் ரஜ்னீஷ் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
ஆனால், இந்த புகார்களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இந்நிலையில், அறக்கட்டளை பரிந்துரையின்படி சிறப்புக் குழு விசாரணை நடத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த், ஐஜி எஸ்.கிரண், உ.பி. நிதித் துறை சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அரசு குழு விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் இடைக்கால அறிக்கை உள்ளது. முழு விசாரணையும் 15 நாட்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அயோத்திக்கு அருகிலுள்ள மில்கிபூரின் ரொடைவுலி தாக்கூரன் கிராமத்தைச் சேர்ந்த லவ்கேஷ் மிஸ்ரா என்பவர் சந்தேக வலையில் சிக்கியுள்ளார். இவர் சுமார் 5 மாதங்களாக காணிக்கை பணம் எண்ணும் குழுவில் உறுப்பினராக உள்ளார். கோயில் பணியில் சேர்ந்தது முதல் அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவர் சமீபத்தில் ஒரு மதுக்கடையில் ரூ.50,000-க்கு ஒரே நேரத்தில் மது வகைகளை வாங்கியுள்ளார். இது குறித்து கிராமவாசிகள் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தாக்கூரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்ற அயோத்தி காவல் துறை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத்ராய், உறுப்பினர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, லவ்குஷ் மிஸ்ரா வீட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் ரொக்கத்தைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு மாதந்தோறும் சராசரியாக 8 முதல் 9 கோடி ரூபாய் வரை நன்கொடைகள் வருகின்றன. ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் அன்றாடம் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெறுகிறது. இங்கிருந்துதான் காணிக்கை தொகை மாயமாகி வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரையிலும் இப்பிரச்சினையில் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.