ஸ்மிருதி, தீப்தி அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Women’s T20 WC
லண்டன்: நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு எட்கபாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற குரூப்-ஏ ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். ஷெபாலி வர்மா 5 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஸ்மிருதி விளாசல்: இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஸ்மிருதியுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானத்துடன் விளையாடி ரன்களைச் சேர்த்தது. அதேநேரத்தில் ஸ்மிருதி மந்தனா பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். இதனிடையே ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து (2 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) வீழ்ந்தார். பாரதி புல்மாலி 1, ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்த்து அவுட்டாயினர். கடைசியாக தீப்தி சர்மா 12 ரன்களும், ஸ்ரேயங்கா பாட்டீல் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இந்தியா. பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், ஃபாத்திமா சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், டாஸ்மியா ருபாப், ரமீன் ஷமிம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது.
அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் அந்த அணியால் சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. தீப்தி அபாரம்: இந்திய அணி சார்பில் பந்து வீசிய தீப்தி சர்மா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக 5+ விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் கைப்பற்றினார் தீப்தி சர்மா. மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (166) கைப்பற்றிய வீராங்கனையாக அவர் அறியப்படுகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் தீப்தி சர்மா, பிளேயர் ஆப் தி சீரிஸ் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.