Select Location
All Locations
State
Region
City / District
பழனி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த முடிவு

பழனி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த முடிவு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து பக்தர்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை ஜூலை 7-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டண உயர்வு

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பிரசாதமாக பஞ்சாமிர்தம் பெற்று செல்கின்றனர். இந்த பஞ்சாமிர்தம் கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் 1/2 கிலோ டின் பஞ்சாமிர்தம் ஒன்றின் விலை ரூ.45, ரூ.40க்கும் மற்றும் 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தம் விலை ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.45 விற்கப்பட்டு வந்த பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.50 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.30 ஆக விலை உயர்த்த கோவில் நிர்வாக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து மற்றும் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் ஜூலை 11ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கரத புறப்பாடு

அதேபோல் பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்த தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் கட்டணம் ரூ.2500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் ஆலோசனை அல்லது கருத்துக்கள் இருந்தால் ஜூலை 7ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக நேரிலோ அல்லது தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.


Malaimalar 2 hours ago
Home Flash News