Select Location
All Locations
State
Region
City / District
“அயோத்தி மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்” - ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் யோகி காட்டம்

“அயோத்தி மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்” - ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் யோகி காட்டம்

புதுடெல்லி: “அயோத்தி ராமர் கோயில் மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்கள். ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள்” என்று எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் தியோரியா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான சர்ச்சைகள் குறித்து குறிப்பிட்டார். அவர் தனது உரையில், “அயோத்தி மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்கள். ராமரின் பக்தர்களை சோதிக்காதீர்கள். ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள். மக்களின் நம்பிக்கையை யாரும் தவறாகப் பயன்படுத்த அரசு அனுமதிக்காது. சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நான் ஏற்கெனவே கூறி இருந்தேன். அதேபோல, அறிக்கை வந்ததுடம் உடனடியாக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையையும் பொய்யையும் நாங்கள் பிரித்தறிவோம் என்பதற்கான உறுதியை அளிக்கிறேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய விவகாரம் என்பதால், அரசு இதை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. மக்களின் உணர்வுகளுடன் யார் விளையாடினாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாரும் இதில் இருந்து தப்ப முடியாது. டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் (அரவிந்த் கேஜ்ரிவால்) இன்று அங்கு (அயாத்திக்கு) வந்துள்ளார். அவரிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். டெல்லி மக்கள் அவருக்கு பல ஆண்டுகளாக வாய்ப்புகளை வழங்கினார்கள். ஆனால், அவர் டெல்லிக்கு ஊழலைத் தவிர வேறு எதையும் தரவில்லை. அயோத்தியில் டபுள் இன்ஜின் பாஜக அரசு செய்த அதே நீதியை ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் செய்திருந்தால், அயோத்தி கோயில் ஜொலிப்பதைப் போல டெல்லியும் ஜொலித்திருக்கும். அயோத்தி என்பது நமது ஒற்றுமையின், சனாதன தர்மத்தின் ஒற்றுமையின் சின்னம். அயோத்தி மீது அவதூறு பரப்பாதீர்கள். பகவான் ராமரின் கண்ணியத்தை பின்பற்றக் கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை அயோத்திக்குச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “நாங்கள் இப்போதுதான் ராமர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு திரும்புகிறோம். அனைவரின் நல்வாழ்வு, வளம், ஆரோக்கியத்துக்காக நாங்கள் ராமரிடம் வேண்டிக்கொண்டோம். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. இந்த வழக்கில் கீழ்மட்ட ஊழியர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வளவு பெரிய மோசடியை, நீண்ட காலமாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது. இதில், உயர்மட்டத் தொடர்புகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள் மீது பழியைச் சுமத்திவிட்டு, செல்வாக்கு மிக்கவர்களைப் பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது” என குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்​தி ராமர் கோயி​லில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்​றும் நகைகள் காணாமல்போன​தாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்தரவிட்டார். எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​தது. அறக்​கட்​டளை மற்​றும் வங்கியுடன் தொடர்​புடைய சந்​தேக நபர்​கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசா​ரணை நடத்​தி​யுள்​ளது. மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்​கட்​டளையை மறு சீரமைக்க வேண்​டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அது அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News