கமேனி இறுதிச் சடங்கு! மத்திய அமைச்சர், பிகார் ஆளுநர் பங்கேற்பு!
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஈரான் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் ஊர்வலமாக தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் பிரியாவிடை நிகழ்ச்சிகளும், ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 7-ல் புனித நகரான கோமில் சிறப்பு தொழுகையும், ஜூலை 9-ல் மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.