Select Location
All Locations
State
Region
City / District
"சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை" – வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்த நற்பணி இயக்கம்!

"சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை" – வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்த நற்பணி இயக்கம்!

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. இவர் நந்தா, காக்க காக்க, சிங்கம், ஏழாம் அறிவு, கருப்பு உள்பட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமா துறையை தாண்டி அகரம் என்ற அறக்கட்டை மூலம் கல்வி உள்பட பல்வேறு சமூகப்பணிகளையும் சூர்யா மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய வீரமணி என்பவர், காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது; என்று கூறினார். இதன் மூலம் நடிகர் சூர்யா அரசியலில் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. மேலும், இது சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இரா.வீரமணி. 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். எனவே,சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Smacy News 1 hour ago
Home Flash News