எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்படுவதாகக் கூறி, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்
சென்னை: அதிமுகவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது என்னுடைய வாழ்வில் நான் கண்ட எல்லா விதமான ஏற்றத்திற்கும் காரணமாக இருந்த இயக்கம். திருப்பூரில் எனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த இயக்கம் அதிமுக எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா. எளிய தொண்டனாக 1980ம் ஆண்டில் கழகத்தில் இணைந்த எனக்கு கிளை கழக செயலாளர், மாவட்ட பனியன் சங்க செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர், நகர கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் என கழகத்தில் அனைத்து உயரிய பொறுப்புகளையும். 2011 ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதனை தொடர்ந்து அமைச்சராகவும் உயரிய பதவிகளை தந்து புரட்சி தலைவி அம்மா அவர்கள் அழகு பார்த்தார்.
2016ல் எனக்கு புரட்சி தலைவி அம்மா அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத போதும் மாவட்ட கழக செயலாளராக 4 தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடு பட்ட காரணத்தினால் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
2016 தேர்தலுக்கு பின்பு 22 மாவட்ட கழக செயலாளர்களை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மாற்றிய போதும் என்னை மாற்றாததே புரட்சி தலைவி அம்மா அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாக இருந்ததை சுட்டி காட்ட கடமை பட்டுள்ளேன். அம்மாவின் மறைவிற்கு பிறகு மாவட்ட கழக செயலாளராக தலைமை அறிவுறுத்திய பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன்.
2020 ல் எந்த காரணமுமின்றி எனது மாவட்ட செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்ட போதும் தலைமைக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தேன்.
2021 தேர்தலில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கழகத்தினரின் மேலான உழைப்பால் வெற்றி அடைந்தேன். தொடர்ந்து திருப்பூர் மாநகரில் கட்சி பலமிழந்து வருவதை பல முறை தலைமையிடம் சுட்டி காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையே இருந்தது .
2026 தேர்தலில் போட்டியிட்ட போது தான், திருப்பூரின் கழகத்தின் உண்மை நிலை தெரிய வந்தது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் தோல்வி அடைந்த எங்களை போன்ற வேட்பாளர்களுக்கு தலைமை எந்த விதமான ஆறுதல் வார்த்தைகளோ, ஊக்கத்தையோ தரவில்லை. கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது அதனை தடுக்க தலைமையும் விரும்புவதில்லை.
என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில் தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும், ஆனால் இன்றோ தலைமையே இயக்கத்தை பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.
எதிர்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநல கூட்டம் இயங்கி கொண்டிருக்கின்றது.
நான் என்றும் அதிமுகவை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால் தேனுடன் ஒரு துளி விஷத்தை சேர்த்தாலும் விஷம் தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.
தண்டனைகளை தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார் தான் கருணையையும், மன்னிப்பை தருவார்கள்?? தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் ஏற்றத்தை தந்தவர் அம்மா.
கூட அரவணைத்து இன்று அனைத்து கட்சிகளும் அதிமுகவினரை அரவணைக்க தயாராக இருக்கும் போது அதிமுகவின் தலைமை நீக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது.
நீண்ட யோசனைக்கு பிறகு அதிமுக எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன்.
இது வரை எனக்கு ஆதரவளித்து வந்த கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். அம்மா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.