Select Location
All Locations
State
Region
City / District
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை தற்காலிக நிறுத்தம்!

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை தற்காலிக நிறுத்தம்!

இந்தியாவின் ஆன்மீக ஒளிவிளக்காகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளான இன்று, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் திடீரென கடல் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றுக்கான சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இயக்க முடியாத சூழல்..

கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவும் இந்தத் திடீர் இயற்கை மாற்றம் காரணமாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான படகுகளை படகுத் தளத்தில் இருந்து தடையின்றி இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் தாழ்வாக இருக்கும்போது படகுகளை இயக்கினால், அவை கடற்படுகையில் உள்ள பாறைகளிலோ அல்லது மணல் திட்டுகளிலோ மோதி சேதமடைய வாய்ப்புள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, படகு சேவை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

வார விடுமுறையை முன்னிட்டு விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு ரசிப்பதற்காகப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் படகு சேவை நிறுத்தப்பட்டால், அவர்கள் கடற்கரையிலிருந்தே சிலைகளைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

இயல்பு நிலைக்கு பின் தொடங்கும்..

தற்போது நிலவும் இந்தச் சூழல் குறித்துப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவிக்கையில், "கடல் நீர்மட்டம் மற்றும் காற்றின் வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, நீர்மட்டம் சீரான உடன் எவ்வித தாமதமும் இன்றி சுற்றுலா படகு சேவை மீண்டும் தொடங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News