தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் - ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கு நாம் தமிழர் சீமான் கண்டனம்..!!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தமிழ் கடவுள் முருகனை மையப்படுத்தி, ஜூனியர் என்.டி.ஆர்., நடிக்கும் தெலுங்கு திரைப்படம், ஆந்திராவில் தயாரிக்கப்படுகிறது. அதில், முருக கடவுள் வட புலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கம் செய்வதை, உறுதிப்படுத்தும் விதமாக பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கின்றன.
கலைப்படைப்பு என்ற பெயரில், அடிப்படை புரிதலற்று, வரலாற்று திரிபுகளை, உண்மையென கட்டமைக்க முயல்வது கண்டனத்துக்குரியது. தனக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிராதவர்கள், தமிழர்களின் முன்னோர்களான சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என, அனைவரையும் தங்கள் கடவுளாக, திருடி சேர்த்துக் கொண்டனர். முருக கடவுகளை, தமிழினம் இழக்க விட மாட்டோம். தமிழ் தான் முருகன்; முருகன் தான் தமிழ். இரண்டும் பிரிக்க முடியாதது. எனவே, முருக கடவுள் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி, அதை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக்கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்ப்பை மீறி, இதே கருத்தோடு வெளியானால், தமிழகத்தில் படத்தை திரையிட விடாமல், மிகப்பெரிய போராட்டத்தை, நாம் தமிழர் கட்சி நடத்தும். சட்டம் --ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது.