Select Location
All Locations
State
Region
City / District
கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700+ பேர் கைது: அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700+ பேர் கைது: அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

திருவனந்தபுரம்: கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், 6,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் நோக்கில் ஆபரேஷன் டூஃபான் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மாநிலங்களின் ஆதரவோடு இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆபரேஷன் டூஃபான் கேரள காவல்துறையால் தொடங்கப்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக இது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 6,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரையிலான மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் உதவி புரிந்துள்ளன. ஐந்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து கேரள போலீஸார் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர். போதைப்பொருட்கள் சமூகத்தை, இளைஞர்களை அதிக அளவில் மிக மோசமாக பாதித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான போரை கேரள போலீசார் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்தார். தென்னிந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த, நிரந்தரமான அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உயர் காவல் அதிகாரிகளும், மத்திய அமலாக்க முகமைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்நேர அடிப்படையில் உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கையை உறுதி செய்யவும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் காவல் கண்காணிப்பாளர் அல்லது அதற்கு மேலான நிலையில் உள்ள அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய முகமைகள், ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.


Hindu Tamil 6 hours ago
Home Flash News