எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதி
சென்னை: அனல் மின் நிலைய பாதிப்புகள் குறித்து மீனவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மாசுகட்டுப்பாடு மற்றும் பொதுநலக் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: வேலைவாய்ப்பு தொடர்பாக, அரசால் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய, அனைவருக்கும் சமநீதியை வழங்கக் கூடிய ஒரு நிரந்தர நடைமுறை உருவாக்கப்படும்.
இதற்காக, எட்டு மீனவ கிராமங்களின் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்களின் விவரங்கள், உண்மையாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்து ஒரு செயல்பாட்டு வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மின்சார வாரியத்தில் ஏற்கனவே நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
அனைவருக்கும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுற்றுச்சூழல், சாம்பல் அகற்றுதல், நீர்வழிப் பாதைகள், ஆற்றுப் பராமரிப்பு, ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, உடனடியாக மேற் கொள்ளக் கூடிய பணிகள் விரைவு படுத்தப்படும்.
எண்ணூர் பகுதி மீனவர்களின் நலன், வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.