அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடைந்தது: குவைத், ஜோர்டான் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்-டிரம்ப் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், தற்போது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
குவைத், ஜோர்டானில் மீது ஈரான் தாக்குதல்:
அமெரிக்க ராணுவத்தின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குவைத்:
குவைத்தின் 'மினா அப்துல்லா' பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் தளவாடங்கள் மற்றும் விநியோக மையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.
ஜோர்டான்&பஹ்ரைன்:
ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் விமான தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜோர்டான் வான்பரப்பில் நுழைந்த 3 ஈரான் ஏவுகணைகளைத் தங்களது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மீண்டும் கடல்வழி முற்றுகையை அறிவித்த அமெரிக்கா:
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடுமையான கடற்படை முற்றுகையை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அமெரிக்கா இந்த முற்றுகையை முதன்முதலில் விதித்தது. பின்னர், ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்கான தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த முற்றுகை தற்காலிகமாக விலக்கப்பட்டது. ஆனால், கடல் பகுதியில் ஈரான் தனது ஆதிக்கத்தை நிறுத்தாததால் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்து, மீண்டும் முற்றுகை அமல்படுத்தப்பட்டுள்ளது
டிரம்ப் எச்சரிக்கை:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஈரான் மீது அடுத்தடுத்து கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். "நாங்கள் ஈரான் மீது தொடர்ந்து மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்துவோம். ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய பாலங்களை அமெரிக்க ராணுவம் குறிவைத்துத் தாக்கி முழுமையாக அழிக்கும்," என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவின் முற்றுகைக்குப் பதிலடியாக, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது, இந்த கடல் வழிப்பாதை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அல்லது யாருக்கும் பயன்படாமல் முடக்கப்படும்" என்று ஈரான் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.
சர்வதேசப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள்:
உலகிற்குத் தேவையான 20% கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஈரானியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரு எண்ணெய் டாங்கர்களில் பயணித்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரானிய தூதரை நேரில் அழைத்துத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளும் உடனடியாகத் தங்களது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.