Select Location
All Locations
State
Region
City / District
ஆக.11-ல் குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

ஆக.11-ல் குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை: வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். ஓராண்டில் என்னென்ன பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 6 தேர்வுகளில் 3 தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகி்ன்றன. அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கக்கூடிய குரூப்-2, குரூப்-4 மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்) ஆகிய 3 தேர்வுகள் மட்டும் எஞ்சியுள்ளன. குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படவி்ல்லை என்றாலும், அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் அதற்கான பயிற்சி வகுப்புகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட உள்ள போட்டித் தேர்வுகள், காலி பணியிடங்கள் குறித்து கேட்டபோது, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியது: “டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படும். என்னென்ன பதவிகள், எத்தனை காலி இடங்கள் என்பன உள்ளிட்ட முழு விவரங்களும் அதில் இடம்பெறும். அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலி இடங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே, எத்தனை காலி இடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது. தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான மின்சார வாரியத்தில் கணிசமான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. காலி பணியிடங்கள் வரப்பெற்றதும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, குரூப்-2, குரூப்-2ஏ அல்லது குரூப்-4 தேர்வுடன் சேர்க்கப்படும்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, குறித்த காலத்தில் அறிவிப்பு வெளியிட்டு குறித்த தேதியில் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். முதல்வர் உத்தரவு: இதற்கிடையே, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் துறையின் உயர் அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள குரூப்-2, குரூப்-2ஏ தேர்விலும், அக்டோபரில் அறிவிக்கப்படும் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்விலும் காலி பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Hindu Tamil 2 hours ago
Home Flash News