Select Location
All Locations
State
Region
City / District
CWG 2026: பளுதூக்குதலில் தமிழகத்தின் ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம்!

CWG 2026: பளுதூக்குதலில் தமிழகத்தின் ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம்!

சென்னை: கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரரான ராஜா முத்துப்பாண்டி. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவையும், க்ளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவையும் தூக்கி, தனது பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இதே பிரிவில் மலேசிய வீரர் பின் பிடின் (299 கிலோ) தங்கமும், பப்புவா நியூ கினியின் மொரியா (282 கிலோ) வெண்கலமும் வென்றனர். கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தமாக 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்தார். அதன் பின்னர் காயம், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட காரணத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியாமல் இருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேச களத்துக்கு திரும்பினார். தற்போது வெள்ளி வென்றுள்ளார்.


Hindu Tamil 5 days ago
Home Flash News