Select Location
All Locations
State
Region
City / District
“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” - முதல்வர் ரங்கசாமி

“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: “இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். என்.சி.சி பிரிவு தனது சாகச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்கரையோரம் ‘கடல்வழிப் படகோட்டப் பயணம் - 2026’ நிகழ்வு இன்று தொடங்கியது. வரும் செப்டம்பர் 27 வரை இப்பயணம் நடக்கிறது. மொத்தம் 100 பேர் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரியின் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து முதலில் கடலூர் வரை செல்கின்றனர். 3 படகுகளில் தலா 7 பேர் என 21 பேர் செல்கின்றனர். அதையடுத்து கடலூர்- ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - தூத்துக்குடி, தூத்துக்குடி - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - சென்னை வரை செல்கின்றனர். மொத்தம் 800 கி.மீ தொலைவு செல்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கடல் பயணத்தை தொடக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மாணவர்கள் கடல் சாகசப் பயணம் மன தைரியத்தையும், எதையும் சாதிக்கும் ஊக்கத்தையும் தரும். இதனால் நாடு வளம்பெரும். வெற்றிக்கரமாக பயணத்தை முடிக்க வாழ்த்துகிறோம். நாட்டின் வளர்ச்சி குழந்தைகள் கையில் உள்ளது. தலைவர்கள் இதை அறிந்து திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். திட்டங்கள் வாயிலாக நம் நாடு பெரும் வளர்ச்சி அடையும். உலக நாடுகளில் சிறந்த நாடாக இந்தியா வர குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை தந்து சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இலாகா ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, “இலாகா ஒதுக்கீடு வரும். ஆனால், ஏன் காலதாமதம் என்றுஎனக்கே தெரியவில்லை” என்றார். அப்போது செய்தியாளர்கள் பாஜக முக்கிய இலாகா கேட்டு அழுத்தம் தருகிறதா என்று கேட்டதற்கு, பதில் தராமல் ‘வணக்கம்’ எனப் புறப்பட்டார்.

இலாகாவுக்காக காத்திருக்கும் அமைச்சர்கள்: புதுச்சேரியில் என்டிஏ அரசு மீண்டும் அமைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி மற்றும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால் என்.ஆர்.காங்கிஸ் - பாஜக தரப்பில் கடும் இழுபறி பல விஷயங்களில் நீடித்தது. கடந்த 20-ம் தேதி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கி பட்டியல் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி அளித்தார். முதல்வர் கோப்புக்கு ஒருமணி நேரத்தில் அனுமதி வரும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒருவாரம் ஆகியும் இன்னும் ஆளுநர் அமைச்சர் இலாகாவுக்கு அனுமதியை தரவில்லை. பாஜகவுக்கு கடந்த முறையை போல் முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்யாததுதான் பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிகிறது. இந்நிலையில், முதல்வர் அது தொடர்பான கேள்விக்கு மழுப்பலான பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News