‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம்!
‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவைத் தோ்தலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 14 போ் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா்.
இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட அமெரிக்காவின் ’நியூ யார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தின் தலைப்பில், “பாகிஸ்தான் காஷ்மீர் தேர்தலில் புதிய மோதல் வெடித்தது” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியை மேற்கோள்காட்டி இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது: “நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்பு தவறானது மற்றும் மக்களைத் திசைதிருப்பக் கூடியது. 'பாகிஸ்தான் காஷ்மீர்' என்று எதுவும் இல்லை. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இனியும் இருக்கும். இந்தப் பகுதிகளின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது அங்குள்ள மக்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.