ரஹானே ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன?
மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். 38 வயதான அஜிங்க்ய ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டி, 90 ஒருநாள் போட்டி, 20 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவர், 2013-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். கடந்த 2023-ல் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
எனது பேட்டிங்கில் நான் எப்போதும் சரியான கணிப்பையும் நேரத்தையுமே நம்பியிருக்கிறேன். அதற்கான முக்கியத்துவத்தையும் நான் நன்கு அறிவேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இதுவே சரியான தருணம் என நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் .வலது கை பேட்ஸ்மேனான ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் 38.46 சராசரியுடன் 5,077 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 26 அரை சதங்கள் அடங்கும். அதேவேளையில் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35.26 சராசரியுடன் 2,962 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 3 சதங்கள், 24 அரை சதங்கள் அடங்கும்.
சர்வதேச டி 20-ல் 20 ஆட்டங்களில் 375 ரன்கள் எடுத்திருந்தார். ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக அமைந்தது 2021-ம் ஆண்டாகும். அப்போது வழக்கமான கேப்டன் விராட் கோலி இல்லாத சூழலில் இந்திய அணியை வழிநடத்திய ரஹானே, முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிய நிலையிலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றிக் காட்டினார்.