தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றவுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஜூன் மாதம் ஆளுநர் உரையுடன் தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் விஜயின் பதிலுரை வழங்கியதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது. நாளை பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் நாளை மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்யவுள்ளனர். தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறவுள்ளது. இது தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் தலைமையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.