Select Location
All Locations
State
Region
City / District
“கரூர் சம்பவத்தில் அவசரமாக விஜய்யை கைது செய்யவில்லை; ஆனால் தற்போது...” - ஜவாஹிருல்லா

“கரூர் சம்பவத்தில் அவசரமாக விஜய்யை கைது செய்யவில்லை; ஆனால் தற்போது...” - ஜவாஹிருல்லா

சென்னை: ‘கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னரும், தவெக தலைவர் விஜய் மீது கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய ஆட்சியில் சமூக வலைதளப் பதிவுகள், பொதுக்கூட்டப் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல’ என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில், அவசர அவசரமாக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

நேற்றைய உரையில் எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வாசகம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனைப் பெரும் குற்றமாகக் கருதி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அளவுக்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அளவுக்கு மீறியதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதுமாகும்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதியம் வரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை எனக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பது மிகுந்த கவலைக்குரியது. நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கைது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது.


Hindu Tamil 7 hours ago
Home Flash News