Select Location
All Locations
State
Region
City / District
“ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது ஆபத்து” - அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

“ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது ஆபத்து” - அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

சென்னை: “ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும். மது வகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் “https://tasmace2e.in/” என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மது வகைகள் உள்ளன, அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும்.

அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன் பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும். மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.


Hindu Tamil 1 hour ago
Home Flash News