முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்த வலை சேதம் விவகாரம்; திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 6ம் தேதி நெம்மேலிக்கு சென்று இத்திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கல்வெட்டை மறைத்திருந்த வலையைச் சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இதயவர்மன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கில் முன் ஜாமீன் கோரி இதயவர்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன், முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு மாமல்லபுரம் போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.