பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ச. ஜோசப் விஜய், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 06.08.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.