Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
சமையலறையின் 'மகாராணி' என்று அழைக்கப்படும் தக்காளி, சில மாதங்களுக்கு முன்பு வரை சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையாகி, இல்லத்தரசிகளின் வரவு-செலவுத் திட்டத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது. ஆனால், தற்போது ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாகக் குறைந்து, சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 12 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி சாமானிய மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியையும், சமையலறைகளில் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வழக்கமாகத் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும், பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்படும். கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதிகளில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.தினசரி சந்தைக்கு வரும் தக்காளி லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால், சந்தையில் தக்காளியின் இருப்பு அதிகரித்துள்ளது. வரத்து அதிகமாகி, தேவை சீராக இருக்கும் போது இயல்பாகவே விலை குறையும் என்ற பொருளாதார விதியின்படி, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சரசரவெனச் சரிந்துள்ளது.