ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மறுத்த பரிசல் ஓட்டிகள்! ஏன்?
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால், 4 நாள்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த போதிலும், அருவியில் நீரின் எதிர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக பரிசல்கள் இயக்க பரிசல் ஓட்டிகள் முன்வராததால் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த பருவமழை குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் வரத்து சுமார் 9,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, சனிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடியாக சரிந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால் ஒகேனக்கலில் நான்கு நாள்களுக்குப் பிறகு பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி ஆற்றில் மாமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் நீர்வரத்து மாறால் நீர் விசையின் எதிர்ப்பு காரணமாக மணல்மேடு பகுதியில் இருந்து மீண்டும் தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6000 கன அடியாக சரிந்த போதிலும் அருவிகளில் விழும் நீரின் எதிர்ப்பு விசை காரணமாக பரிசல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக பரிசல் ஓட்டிகள் தெரிவித்து இருந்தனர். அதன் பேரில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலமேகம், சுருளிநாதன், தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாமரத்து கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசலில் சென்று, தொம்பச்சிக்கல் படிக்கட்டு பகுதியில் பரிசல் நிறுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளை இடையூறு இன்றி, நீர் விசைக்கு ஏற்றவாறு பரிசலை நிறுத்தி ஏற்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.