யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!
யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. மேலும், ஜூலை 6 ஆம் தேதி மறுதேர்வும் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வின் விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவை இந்த வாரத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று (ஆக.10) வெளியிட்டிருக்கிறது.
யுஜிசி நெட் (UGC NET) மட்டுமல்லாது, அறிவியல் துறைகளுக்கான சிஎஸ்ஐஆர் நெட் (CSIR-NET), விவசாயம் மற்றும் விலங்கு அறிவியல் பிரிவுகளுக்கான ஐசிஏஆர் ஏஐஇஇ (பிஜி) மற்றும் (பிஎச்டி) ICAR AIEEA (PG) and AICE (PhD) ஆகிய தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகளும் இந்த வாரத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தற்காலிக விடைக்குறிப்பைப் பார்க்கவும், அதில் ஏதேனும் திருத்தம் இருப்பின் தேர்வர்கள் முறையிடலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.