ஒரே வாரத்தில் 2 முறை.!! அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அதிரடி காட்டிய வடகொரியா
பியோங்யாங்: ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான வோன்சன் (Wonsan) என்ற இடத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது.
நேற்று ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் தூரம் சீறிப்பாய்ந்து சென்றது. கொரிய தீபகற்பத்தில் தொடரும் ராணுவப் பதற்றத்தை வடகொரியாவின் இந்த சமீபத்திய ஏவுகணை சோதனையானது மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே வடகொரியா நேற்று ஏவி சோதித்த பாலிஸ்டிக் ஏவுகணையானது, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே விழுந்ததாக ஜப்பான் தகவல் தெரிவித்துள்ளது.