புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு ஆக.21, 22-ல் விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டித் தேர்வு நடக்க இருப்பதால் 69 பள்ளிகளுக்கு வரும் ஆக.21, 22ல் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. புதுவை தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டி தேர்வு வரும் ஆக.21 முதல் 23-ம் தேதி வரை நடக்கிறது. இதனால், புதுவை பிராந்தியத்தில் 82 தேர்வு மையங்களாக செயல்படும், 69 பள்ளிகளுக்கு வரும் 21, 22-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மோகன்குமார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், போட்டித்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளின் பட்டியல் கல்வித்துறை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் மற்றும் கால அட்டவணை பள்ளிக்கல்வித் துறையால் தனியாக அறிவிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.