"வந்தே மாதரம்" முதல் இரண்டு அடிகள் மட்டுமே பாடப்படும் - 1937 தீர்மானத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் திட்டவட்டம்
வந்தே மாதரம் தேசியப் பாடலின் முதல் இரண்டு அடிகள் மட்டுமே கட்சி நிகழ்வுகளில் பாடப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது. 6 அடி கொண்ட 3 நிமிடம் 10 வினாடிகள் நீளமுள்ள வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. கடந்த வாரம் நடந்த 80வது சுதந்திரத்தினவிழாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் இசைக்கும்போது அதை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது. ஆனால் மூத்த தலைவர் கார்கே அமர நாற்காலி எடுத்து வரவே சோனியா சைகை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கும் மேலான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர். 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.