சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். மேடை மற்றும் ஒலிபெருக்கி காலத்தைக் கடந்து, இப்போது இணைய ஊடகத் தளங்கள் மூலமாகவே அரசியல் நிலை தீர்மானிக்கப்படுகின்றன. இதனை பிரதமர் மோடி அரசு தீவிரமாகக் கருதுவதாகத் தெரிகிறது. இவரது கருத்துப்படி, கட்சி, அரசு மற்றும் இளைஞர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு போன்றவற்றை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
இதற்கு அனைத்து அமைச்சர்களும் முகநூல், இன்ஸ்டாகிராம், லிங்க்ட் இன் மற்றும் எக்ஸ் ஆகிய நான்கு முக்கிய சமூக வலைதளங்களில் பங்கெடுப்பது அவசியம். இவற்றில் அமைச்சர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
இவற்றை கண்காணிக்க வேண்டி மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பிரதமரின் அலுவலகம் தயாரித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அந்த அறிக்கை அமைச்சர்களிடம் மூடிய உறையில் வழங்கப்பட்டது. அதில் அமைச்சர்களின் செயல்பாட்டுத் தரவரிசைகளும் இடம்பெற்றிருந்தன. அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு உறை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில், அந்த நான்கு இணைய ஊடகத் தளங்களில் அமைச்சர்களின் பதிவுகள், பல்வேறு விவகாரங்கள் குறித்த அவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துகள் உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
இளைஞர்கள் சமூக இணைய ஊடகங்களில் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். அங்கிருந்து பரப்பப்படும் தகவல்கள் அவர்களைச் சென்றடைகின்றன. சில தவறான தகவல்கள் அவர்களைத் திசை திருப்பக்கூடும் என்பதால், அரசாங்கம் விழிப்புடன் இருக்கவும் பிரதமர் எச்சரித்துள்ளார். இணைய ஊடகங்களில் துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக அமைச்சர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு விவாதங்களில் பங்கேற்கவும் வலியுறுத்தி உள்ளார்.
அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமான பொறுப்பில் உள்ளவர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் தகவல்களுக்கு அதிக நம்பகத்தன்மை இருக்கும் என்பது பிரதமரின் நம்பிக்கை. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அதிக ஈடுபாட்டை காட்டுமாறு பிரதமர் அமைச்சர்களுக்குக் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அவரே அந்தத் தளத்தில் 'ஜென்ஸீ' பிரிவினருடன் உரையாடியதன் மூலம் இந்தச் செய்தியை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார்.