தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன்: ஜிவி பிரகாஷ்
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பேன் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரங்களும் தென்படுகின்றன.
முக்கியமாக, கடந்த மாதம் தன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் தனுஷ், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனப் பேசியிருந்தார்.
இதனால், மறைமுகமாகவே தன் ரசிகர்களுக்கு அரசியல் அறிவிப்பைப் பதிவு செய்தார் என்றே தெரிகிறது. மேலும், போஸ்டர்களில் தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதனை உறுதிசெய்யும் விதமாகவே இருந்தது. தொடர்ந்து, தன் நற்பணி மன்றம் மூலமாக தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்த தனுஷ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷிடம், “நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஜிவி பிரகாஷ், “என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்கு இருக்கும்” எனக் கூறியுள்ளார். தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் என பல வெற்றிப்படங்களுக்கு ஜிவி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.