தமிழகம் - ஆந்திரா இடையே சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்
சென்னை: தமிழகம் - ஆந்திரா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லை வாசல் ஊராட்சி, கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.
அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்தார். சென்னை காசிமேட்டில் இருந்து சென்ற தமிழக மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 17-ம் தேதி, ஆந்திர அதிகாரிகள் 8 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, அவற்றில் இருந்த மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்விரு நிகழ்வுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதே பிரச்சினை குறித்து பாமக எம்எல்ஏ சிவக்குமார், திமுக எம்எல்ஏ செந்தில் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் எம்எல்ஏ செல்வசுவாமி ஆகியோரும் பேசினார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலில், “சவுதி அரேபியாவில் தமிழக மீனவர்கள் 4 பேர் மீது கடந்த ஆக. 10-ம் தேதி, ஈரானிய கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். காயமடைந்த சங்கர் ஆபத்தான நிலையில் சவுதி அரேபியா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லேசான காயமடைந்த பால்ராஜ், மணிகண்டன் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக தகவல் வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவரது உடலை தமிழகம் கொண்டுவரவும், காயமடைந்த வர்களை அழைத்து வரவும் தேவையான நடவடிக்கைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்.