யுஏஇ ஓட்டலில் இந்தியர், அமெரிக்கருக்கு மட்டுமே அறை: பாக். முன்னாள் சபாநாயகர் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரக ஓட்டலில் இந்தியர், அமெரிக்கருக்கு மட்டுமே அறை தரப்பட்டதாகவும், பாகிஸ்தானியர்கள் பாகுபாடுடன் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் முன்னாள் சபாநாயகரும், பிடிஐ தலைவருமான அசாத் கைசர் எம்.பி. நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) விமானம் ரத்து செய்யப்பட்டபோது, இந்திய,அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அறை வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் அசாத் கைசர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கூறியுள்ளார்.
இந்நிகழ்வு குறித்து உடனடியாகத் தூதரக மட்டத்தில் அமீரக அரசுடன் பேசி விளக்கம் பெற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அவர் வலியுறுத்தினார். அமீரகத்தின் வளர்ச்சியில் பாகிஸ்தானியர்களின் பங்களிப்பையும், இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நல்லுறவையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா - ஈரான் மோதலின்போது பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமான பங்காற்றியிருந்த நிலையில், சகோதர இஸ்லாமிய நாடான அமீரகத்தில் இத்தகைய நிகழ்வு நடந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், எனினும் இதனால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்ற அனுபவங்களை பிற குழுவினரும் தம்மிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டாலும், இது ஆதாரங்கள் மூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அமீரகத்தில் சுமார் 15 லட்சம் பாகிஸ்தானியர்கள் வசித்து வரும் நிலையில் இச்சம்பவத்தை பாகிஸ்தான் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.