தில்லி காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்னா! என்ன நடந்தது?
தில்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தில்லியில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்காததால் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வழக்கறிஞருடன் சென்று தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை புகார் எண் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தில்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதன் நகலை அளிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய காவல்துறை துணை ஆணையர் தொடர்ந்து மறுப்பதால், காவல் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டு வருகிறார். முதல் தகவல் அறிக்கை பதியும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.