Select Location
All Locations
State
Region
City / District
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்ததற்கு இதுதான் காரணம்! அமைச்சர் விளக்கம்

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்ததற்கு இதுதான் காரணம்! அமைச்சர் விளக்கம்

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேரவையில் விளக்கமளித்தார். எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இன்று பேரவையில் பேசினார்.

அப்போது, எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால் நீரும் மஞ்சள் நிறமாக மாறுவதால் இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், "கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்பு குறித்து திருவொற்றியூர் எம்எல்ஏ எனக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கீழ் உள்ள அமைப்பு, 5 இடங்களில் ஆய்வு செய்தார்கள். இதில் 2 இடங்களில் ஆக்சிஜன் (dissolved oxygen) அளவு குறைவாக இருந்தது. மனித கழிவுகள் அந்த இடத்தில் கலந்திருக்கலாம் என்று ஆய்வு சொல்கிறது. இதற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் இல்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இறந்த மீன்கள் ஆய்வுக்காக கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வந்ததும் பேரவையில் தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.


Dinamani 1 hour ago
Home Flash News