முதல்வர் விஜய் தொடர்பான கேள்வி - கார்த்தி கொடுத்த அதிர்ச்சி பதில்
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்க கார்த்தி மற்றும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரில் முருகனைத் தரிசித்த படக்குழு திருநெல்வேலி சென்று சர்தார் 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்களுடன் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
அப்போது கார்த்தியிடம் கைதி, சர்தார் போன்ற படங்களைத் தவிர்த்து பெரியளவில் உங்களது படங்கள் பேசப்படையே என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, “பேசப்படவில்லையே? மெய்யழகன் என ஒரு படம் நடித்தேன். எல்லாரும் அதைப் பாராட்டினார்கள். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி. எல்லா படங்களும் பாராட்டுவதற்காகத்தான் செய்கிறோம். கலைஞர்கள் என்பது குழந்தைகள் போன்றவர்கள். என்ன செய்தால் அப்பா அம்மாவை சிரிக்க வைக்க முடியுமோ அதை செய்கிறோம். அதை நன்றாக செய்யும் போது கொண்டாடுவார்கள். நன்றாகச் செய்யாத போது திட்டுவார்கள். இரண்டையும் கேட்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
அடுத்ததாக உளவாளி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பொதுவாக உளவாளிகளுக்கு இல்லறமும் கிடையாது, கல்லறையும் கிடையாது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் மக்களுக்குத் தேவையான விஷயத்தை எங்கேயோ இருந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதையுமே எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் தான் உளவாளிகள். அவர்கள் நம் கண்களுக்கே தெரியமாட்டார்கள்” என்றார்.
பின்பு விஜய் அரசியலுக்குச் சென்ற பிறகு திரையுலகம் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும். நன்றாக இருக்கிறது” என்றார். அடுத்து சர்தார் முதல் பாகத்தில் சமூக பார்வை இருந்தது, இரண்டாம் பாகத்தில் இருக்குமா, “மித்ரன் படங்களில் கண்டிப்பாக ஒரு சமூக பார்வை இருக்கும். அதை பொழுதுபோக்கோடு மக்களுக்குச் சொல்ல நினைப்பார். இரண்டாம் பாகத்திலும் பெரிய குண்டு வைத்திருக்கிறோம்” என்றார்.