திருப்பதி தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத நகை, பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
திருமலை: திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சொத்து பத்திரங்கள், நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் கோயில் இணை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாதம். இவர் திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பணியாற்றி வருகிறார். உயர் பதவியில் இருக்கும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக இவரின் திருப்பதி தொட்டாபுரம் வீடு, திருமலையில் இவருக்கென ஒதுக்கப்பட்ட பி-53 குடியிருப்பு, இவரது மைத்துனர்கள் இருவரின் வீடு, செல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீடு என மொத்தம் 5 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. திருப்பதி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஸ்ரீநிவாச ராவ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸார் இந்த சோதனையை மேற்கொண்டனர். மேலும், திருப்பதி எஸ்டிவி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இவரது லாக்கரிலும் சோதனை செய்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளின் பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வீட்டு மனை பட்டாக்கள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்கம் என வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்துள்ளது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கணக்கில் வராத அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எனினும் அவற்றின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.