சூதாட்ட விளையாட்டு துல்கரைக் காப்பாற்றியதா? ஐ எம் கேம் திரைவிமர்சனம்
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், கயடூ லோகர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஐ எம் கேம். சூதாட்டத்தையும், அதனால் உண்டாகும் பழிவாங்கும் எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். ஜிம்சி காலித் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாய் இசையும், சாமன் சாக்கோ படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
தொழிலதிபரின் மகனான துல்கர் சல்மானுக்கு சூதாட்டத்தின் மீது அளப்பரிய ஆர்வம். இந்த ஆர்வத்தால் தொழிலில் கவனம் செலுத்தாமல் தனது பணத்தை இழக்கிறார். கடன் வாங்கி சூதாடுகிறார். சூதாட்டம் தீவிரமடைய கடன் கொடுத்தவர்கள் அவரை சூழ்கின்றனர். இறுதியாக ஒருமுறை தனது அம்மா கொடுத்த பணத்தை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் செய்கிறார். அதிலும் பணத்தை இழக்க விபத்தை சந்திக்கிறார். அதில் மோசமான படுகாயமடைந்த அவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லாம் சரியாகிவிட்டது என நிம்மதியாக இருக்க நினைக்கும் துல்கருக்கு அவரது புதிய கை மூலமே பிரச்சனை ஆரம்பிக்கிறது. தனக்கு பொருத்தப்பட்ட வேறு ஒருவரின் கை தன்னிச்சையாக செயல்பட்டு அவருக்கு இடைஞ்சல் தருகிறது. தன்னால் கட்டுப்படுத்த முடியாத கை, வில்லன் டி எனப்படும் மிஷ்கினை கொல்லத் துடிக்கிறது. துல்கரின் கைக்கும், வில்லன் மிஷ்கினுக்கும் என்ன பகை? ஏன் அவரது கை மிஷ்கினைக் கொல்லத் துடிக்கிறது? கட்டுப்படாத கையை வைத்துக் கொண்டு எப்படி இந்த சிக்கலை துல்கர் சரி செய்தார் என்பதே ஐ எம் கேம் திரைப்படத்தின் கதை.
சூதாட்டத்தையும், பண மோசடியையும் வைத்து தமிழில் நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. துல்கர் சல்மானே கூட லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் சாமர்த்தியமாக பணத்தைக் கொள்ளையடிக்கும் வங்கி அதிகாரியாக நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் சூதாட்டமே பிரதானம் என்பதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பழிவாங்கும் கதையை மையமிட்டே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பீச்சாங்கை எனும் பெயரில் இதே போல ஒரு கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஐ எம் கேம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு சற்று சவால் தரும் கதாபாத்திரம். தனது கைக்கு ஒரு கதாபாத்திரம், எஞ்சிய உடலுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரே உடலில் தனது நடிப்பில் இருந்து கையை மட்டும் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய இந்த கதாபாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார் துல்கர். தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார் துல்கர். தனது கையால் அவஸ்தைபடும் இடங்களில் அவரது நடிப்பில் மெனக்கெடல் தெரிகிறது. அவருக்கு இணையாக நடித்துள்ள கயடூ லோகருக்கு பெரிய அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. பிசியோதெரபிஸ்ட்டாக நடித்துள்ள அவர் வெறுமனே வந்து செல்லும் நாயகியாக மட்டும் இருக்கிறார். இத்துடன் துணை நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் போர்ட், கதிர் என பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும், சூதாட்டத்தின் காரியகர்த்தாவாகவும் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் தனது உடல் மொழியால் ஸ்கோர் செய்கிறார். இரண்டாம் பாதியில் சூதாட்டத்திற்காக அவர் பேசும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அழகான சம்யுக்தா ஒரு சில காட்சிகளைத் தவிர படம் முழுக்க அழுதபடியே வருகிறார்.
சூதாட்டத்தில் பங்கு பெற்ற ஒரு கதாநாயகன், சூதாட்டத்திற்கு காரணமானவரை அழிக்கும் நகைமுரண் கதை இது. முதல் பாதியில் குறிப்பாக கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை டல்லடிக்கிறது. சூதாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட கதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு பின் பழிவாங்கும் படலத்திற்குள் சென்ற திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துவதை தடுக்க படக்குழு முயற்சித்திருக்கலாம். இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளன. கிரிக்கெட் வீரர் கொல்லப்படுவதும், அது அப்படியே கண்டுகொள்ளாமல் போவதும் எப்படி என காட்சிகளைப் பார்க்கும்போதே கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.
விறுவிறுப்பாக வெல்ல வாய்ப்பிருந்தாலும் கிடைத்த இடத்தில் விளையாடி வெல்ல முயன்றிருக்கிறது ஐ எம் கேம்.